திப்பணம்பட்டியில் குடிநீர் இணைப்பை
துண்டிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பாவூர்சத்திரத்தில் உள்ள ஊராட்சி
ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள
திப்பணம்பட்டி ஊராட்சி பகுதியில் போலியாக ரசீது தயார் செய்த சிலர் முறைகேடாக 200க்கும் மேற்பட்ட
குடிநீர் இணைப்புகளை பணம் பெற்றுக்கொண்டு கொடுத்துள்ளார்களாம். ஏற்கனவே குடிநீர்
தட்டுப்பாடு நிலவி வரும் சூழ்நிலையில் உரிய அனுமதியின்றி கூடுதலாக குடிநீர்
இணைப்பு வழங்கியதால் தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
முறைகேடாக இணைப்பு வழங்கியவர்கள் மீது
நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு
பாவூர்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில்
ஈடுபட்டனர்.அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் முறையான அனுமதியின்றி
வழங்கப்பட்ட இணைப்பு துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில்
அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் நேற்று
திப்பணம்பட்டியில் புதிதாக குடிநீர் இணைப்பு பெற்ற 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து
யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தாங்கள் பணம் செலுத்தி தான் இணைப்பு
பெற்றதாகவும், அதனால் இணைப்பை துண்டிக்க கூடாது என வலியுறுத்தினர். அவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்திய ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஜனார்த்தனன் இது தொடர்பாக மாவட்ட
ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்
என உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

No comments:
Post a Comment