மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Friday 30 June 2017

FX பள்ளியில் ரோஸ் தினம் கொண்டாடப்பட்டது.




வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் CBSE பள்ளி மற்றும் தூய சவேரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் இன்று “ Rose Day” குதுகலமாகக் கொண்டாடப்பட்டது. சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வண்ணமாக ஆசிரியர்களுக்கு பலவித வண்ணங்களில் ரோஜாப்பூக்கள் கொடுத்து மகிழ்ந்தனர். 

மேலும் பூக்களின் ராஜாவாம் ரோஜாவைப் பற்றிய பாடல்களை பாடி அனைவரயும் உற்சாகப்படுத்தினர். ரோஜா மலர் தன் இனிய மணத்தினால் பிறரை மகிழ்விப்பது போல நாமும் நம் நற்செயல்களால் பிறரை மகிழ்விக்க வேண்டும் என்ற கருத்தையும் மாணவர்கள் பகிர்ந்து கொண்டனர். 

ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு ரோஸ் மில்க் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தினர். இவ்விழாவிற்கான ஏற்பாட்டினை பள்ளி ஹெரிடேஜ் கிளப் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


மூன்று தலைமுறை மாணவர்களின் இலக்கிய நூல்களை “மேலும்” வெளியீட்டகத்தின் மூலம் வெளியிடும் நிகழ்ச்சி.




பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி பணிநிறைவு பெற்றவர் பேராசிரியர் நா.சிவசுப்பிரமணியன் (70) எண்பதுகளில் மேலும்என்கிற இலக்கிய இதழைத் தொடங்கி நவீன கோட்பாடுகளைக் கல்விப் புலத்திற்கு அறிமுகப்படுத்தி நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களை உருவாக்கியவர்.
படைப்புலகக் கருத்தரங்கு
வல்லிக்கண்ணன், வண்ணநிலவன் போன்ற எழுத்தாளர்களின் தடம்பதித்த இலக்கிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும்வெளியீட்டகம் மற்றும் மேலும் இலக்கிய அமைப்பின் சார்பில் சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும், கவிஞர் கலாப்ரியா படைப்புலகக் கருத்தரங்கினை குற்றாலம் பராசக்தி கல்லூரித் தமிழ்த்துறையோடு இணைந்தும் சாகித்ய அகாடெமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குருஸ் படைப்புலகக் கருத்தரங்கினை தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரித் தமிழ்த்துறையோடும் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் படைப்புலகக் கருத்தரங்கினை திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரித் தமிழ்த்துறையோடும் எழுத்தாளர் வண்ணநிலவன் படைப்புலகக் கருத்தரங்கினை பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரித் தமிழ்த்துறையோடும் இணைந்து நடத்தியவர்.
புத்தாக்கப்பயிற்சி
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையத்தோடு இணைந்து முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கான புத்தாக்கப்பயிற்சியை தொடர்ந்து நடத்தி வருபவர். இளம் எழுத்தாளர்களுக்காக சிறுகதை, நாவல், கவிதைப் பயிற்சிப் பட்டறைகளைத் தென்மாவட்டக் கல்லூரிகளில் தொடர்ந்து நடத்திவருகிறார்.
மேலும்விருதுகள்
தமிழகத்தின் சிறந்த இலக்கியத் திறனாய்வாளருக்கான மேலும்இலக்கியத் திறனாய்வாளர் விருதினை நான்காண்டுகளாக வழங்கிவருகிறார். கடந்த ஆண்டுமுதல் சிறந்த இளம்படைப்பாளர் விருதையும் வழங்கிவருகிறார்.
மேலும்இலக்கிய அமைப்பு
தன்னிடம் சவேரியார் கல்லூரியில் முதுகலைத் தமிழ் பயின்ற தன் மாணவர்கள் வே.கட்டளை கைலாசம், சௌந்தர மகாதேவன் ஆகியோருடன் இணைந்து மேலும் இலக்கிய அமைப்பை ஐந்தாண்டுகளுக்கு முன்தொடங்கி ஒவ்வொரு மாதமும் மூன்றாம் புதன்கிழமைகளில் பாளையங்கோட்டை சைவசபையில் நவீனத் தமிழ்இலக்கியக் கருத்தங்குகளை நடத்திவருகிறார். பெங்களூரில் இருக்கும் திறனாய்வாளர் தமிழவனுடன் இணைந்து சிற்றேடு எனும் காலாண்டிதழை நடத்தி தொடர்ந்து இலக்கியக் கட்டுரைகளை எழுதிவருகிறார்.
மண்சார்ந்த இலக்கிய விவாதங்கள்
மண்சார்ந்த இலக்கியங்களை மண்சார்ந்த இடங்களில் சென்று பேசுவோம் என்கிற திட்டத்துடன் திருப்புடைமருதூரில் தாமிரபரணி நதிக்கரையோரம் வண்ணதாசனுடன் அவரது சாகித்ய அகாடெமி விருது பெற்ற சிறுகதைத்தொகுதியான ஒரு சிறுஇசைநூல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை சனவரி 5, 2017 இல் நடத்தினார். நெஞ்சினிக்கும் நெய்தல் என்ற பொருளில் நெய்தல் சார்ந்த இலக்கிய நிகழ்வை திருச்செந்தூர் மணப்பாடு கடற்கரையில் ஜூன்,10,2017 இல் நடத்தினார்.
வேறுபட்ட இலக்கிய முயற்சி
ஜூன் 29, 1948 இல் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவியில் பிறந்த சிவசுவின் எழுபதாவது பிறந்ததினத்தில் வேறுபட்ட இலக்கிய முயற்சியாகத் தன்னிடம் மாணவர்களாய் பாடம் பயின்று பேராசிரியர்களாய் தமிழ்ப்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் மூன்று ஆசிரியர்களின் நூல்களைத் தன் மேலும் வெளியீட்டகத்தின் மூலம் வெளியிட்டார். திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவராகப் பணிபுரியும் சௌந்தர மகாதேவனின் தண்ணீர் ஊசிகள்எனும் கவிதைநூலையும் அத்துறையின் உதவிப் பேராசிரியர் ஜிதேந்திரனின் அட்சயாஎனும் நாடகநூலையும் திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் வே.கட்டளை கைலாசத்தின் சுவடிகளின் சுவடுகள்எனும் நூலையும் மேலும் இலக்கியக் கூட்டங்களில் தான் பேசிய உரைகளின் தொகுப்பு நூலாக படிவாசிஎனும் நூலையும் 29.6.2017 மாலை 6 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தில் மேலும்வெளியீட்டகத்தின் மூலம் வெளியிட்டார்.
நூல்கள் வெளியீடு
சாகித்ய அகாடெமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசன் முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகத்தின் மாவட்ட நூலக அலுவலர் தி.முனியப்பன் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சு. சிவசுப்பிரமணியன், பாளை பேராசிரியர்களின் நான்கு நூல்களையும் வெளியிட சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி முதல்வர் முனைவர் மு .முஹம்மது சாதிக், அக் கல்லூரியின் ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.எம்.ஏ.முகமது நவாப் ஹுசைன், தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரியின் பணிநிறைவு பெற்ற மருத்துவர் டாக்டர் எஸ்.வேல்ராமலிங்கம், வரலாற்று ஆய்வாளர் செ.திவான், தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மைய இயக்குநர் பேராசிரியர் நா. இராமச்சந்திரன், நெய்யூர் லட்சுமிபுரம் கலைஅறிவியல் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்கள் கணேஷ், சு.செல்வி, சங்கர்நகர் ஜெயேந்திரா பள்ளி ஆசிரியர் வாஞ்சி கோபாலகிருஷ்ணன் ஆகியோர் அந்நூல்களைப் பெற்றுக் கொண்டனர். வே.கட்டளை கைலாசம், சௌந்தர மகாதேவன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.
நூல் எழுதவேண்டும் என்ற ஆவல் 

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் சு. சிவசுப்பிரமணியன் தனது சிறப்புரையில் ஒரே நாளில் தன்னிடம் பயின்ற மாணவர்களின் நூல்களை ஓர் ஆசிரியர் தன் பதிப்பகத்தின் மூலம் வெளியிடுவது நல்ல முயற்சி.நூல் எழுதுவதும் வெளியிடுவதும் சாதாரண முயற்சிகள் இல்லை.அதற்கு பேராசிரியர் மேலும் சிவசுவுக்கும் நூலாசிரியர்களுக்கும் என் பாராட்டுகள். இங்கு வந்து இந்த நூல்களைப் பார்த்த உடன் எனக்கு நூல் எழுதவேண்டும் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. சுத்தம் குறித்தும் சுகாதாரம் குறித்தும் சங்க இலக்கியங்களில் நிறைய பதிவுகள் உள்ளன. அவற்றைத் தொகுத்து நூலாக எழுத எண்ணியுள்ளேன். நம் முன்னோர் நமக்குத் தந்த தூய நதி தாமிரபரணியை நாம் சுத்தமாகக் காத்து அடுத்த தலைமுறைக்குத் தருவதற்காக நான் முயற்சிகளை எடுத்துவருகிறேன். பொலிவுறு நகரமாய் நம் நெல்லை மாநகரை நிச்சயம் சிறப்பாக உருவாக்குவோம்.என்று பேசினார்.
நெஞ்சினிக்கும் நெல்லை- கவிதை வாசிப்பு நிகழ்ச்சி

பொலிவுறு மாநகரமாய் திருநெல்வேலி தேர்ந்தெடுக்கப்பட்டதைக் கொண்டாடும் பொருட்டு நெஞ்சினிக்கும் நெல்லை-எனும் கவிதை வாசிப்பு நிகழ்ச்சியை மேலும்இலக்கிய அமைப்பு விழா அரங்கில் நடத்தியது.
கவிஞர் கலாப்ரியா தலைமை வகித்து என் கவிதைகளும் எனக்குப் பிடித்த கவிதைகளும்என்ற தலைப்பில் கவிதைகள் வழங்கினார். மருதமரங்கள் நிறைந்த நெல்லைஎன்ற தலைப்பில் சிவசுவும், ‘மண்மணம் கமழும் நெல்லைஎன்ற தலைப்பில் வே.கட்டளை கைலாசம், ‘தாமிரபரணித் தாய் நெல்லைஎன்ற தலைப்பில் சௌந்தர மகாதேவன், என் நெல்லை எனும் தலைப்பில் சுப்ரா ஆகியோர் நிமிடக் கவிதைகள் வழங்கினர்.
பரிசுகள்
தமிழ்இலக்கியத்தில் தூய்மை குறித்த பதிவுகள்எனும் பொருளில் திருநெல்வேலி மாவட்ட மத்தியநூலகமும் மேலும் இலக்கிய அமைப்பும் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றோருக்கு திருநெல்வேலி மாநகராட்சியின் ஆணையாளர் சு. சிவசுப்பிரமணியன் பரிசுகள் வழங்குகினர். நூலகர் அ.முத்துகிருஷ்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலும் இலக்கிய அமைப்பும் திருநெல்வேலி மாவட்ட மத்திய நூலகமும் இணைந்து செய்திருந்தன.


ஜூலை 20 ல் இன்ஜினியரிங் கவுன்சலிங் - அண்ணா பல்கலை தகவல்.




தமிழகத்தில் அண்ணா பல்கலைகழகம், அதன்கீழ் செயல்படும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பல்கலைகழகம் ஒரே தவணையாக மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு கலந்தாய்வுக்கு விண்ணப்பித்தலுக்கான ஆன்லைன் பதிவு மே மாதம் 1ம் தேதி தொடங்கி மே 31ம் தேதி முடிந்தது. அதில் 1.48 லட்சம் மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். இன்ஜினியரிங் விண்ணப்பித்தவர்களுக்கான, ரேண்டம் எண் ஜூன் 20ம் தேதி வெளியிடப்பட்டது.

ஜூன் 22ம் தேதி பொதுப் பாடப்பிரிவு, வொக்கேஷனல் பாடப்பிரிவு என இருதரவரிசை பட்டியல்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் மருத்துவ மாணவர் சேர்க்கை முடிந்த பின்னர் இன்ஜினியரிங் கலந்தாய்வை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஜூலை 14ம் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட உள்ளது. அதை தொடர்ந்து ஜூலை 17ம் தேதி கவுன்சலிங் தொடங்குகிறது.


19ம் தேதிக்குள் முதல்கட்ட கலந்தாய்வு நடத்தி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. முதல்கட்ட கலந்தாய்வில் மருத்துவம் படிக்க தகுதியுள்ள மாணவர்கள் அந்த கல்லூரிகளில் சேர்ந்து விடுவார்கள் என்பதால், ஜூலை 20ம் தேதி இன்ஜினியரிங் கலந்தாய்வை தொடங்க அண்ணா பல்கலைகழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் வைப்புத் தொகை விநியோகம் - ஆட்சியர் தகவல்



நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வைப்புத் தொகைகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆட்சியர் தகவல் சந்தீப் நந்தூரி கூறியிருப்பதாவது...
நெல்லை மாவட்டத்தில் 2016ம் ஆண்டு நடக்க இருந்த சாதாரண உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து 7 நகராட்சி கள், 36 பேரூராட்சிகள் உறுப்பினர் தேர்தல் மற்றும் 19 ஊராட்சி ஒன்றியங்களில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்,  ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் வைப்புத் தொகையை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் உடனே பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


செப்பறை அழகியகூத்தர் கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடந்தது.





நெல்லை அருகே ராஜவல்லிபுரத்தில் செப்பறை அழகியகூத்தர் கோயில் உள்ளது. பஞ்ச சபைகளில் ஒன்றான தாமிரசபையுடன், மகாவிஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி மற்றும் மணப்படை அரசன் ஆகியோர்களுக்கு சிவ பெருமான் நடன தரிசனம் கொடுத்த சிறப்புப் பெற்ற தலமாக இக்கோயில் விளங்கி வருகிறது.

இக்கோயிலில் ஆனித் திருவிழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4ம் திருநாளில் சுவாமிக்கு திருவாதிரை அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம், நேற்று காலை கோலாகலமாக நடந்தது.

இதையொட்டி காலையில் அழகியகூத்தர், தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். ரதவீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.


இன்று (30ம்தேதி) ஆனி திருமஞ்சனமும், காலை 11 மணிக்கு அபிஷேகமும், மதியம் 1 மணிக்கு நடராஜர் நடன தீபாராதனை மற்றும் சுவாமி வீதிஉலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஐயர் சிவமணி, தக்கார் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். செப்பறை கோயில் தேரோட்டத்தை பார்வையிட வந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் வருகை தந்தனர். 

நெல்லை டவுனில் போக்குவரத்து மாற்றம்.









நெல்லையப்பர் கோயிலில் பிரசித்தி பெற்ற திருவிழாவான ஆனித்தேரோட்ட திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஜூலை 7ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.

இதை முன்னிட்டு கோயிலில் உள்ள சுவாமி, அம்பாள், விநாயகர், சண்முகர், சண்டிகேஷ்வரர் உள்ளிட்ட 5 தேர்களையும் தேரோட்டத்துக்கு தயார்படுத்தும் பணி நடந்து வருகிறது. மேலும் சுவாமி, அம்பாள் சன்னதி நுழைவு வாயில் பகுதியில் பந்தல்கள் அமைக்கும் பணியும் நடக்கிறது. தினமும் சுவாமி, அம்பாள் ரதவீதி வலம் நடக்கிறது. இதனால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்க சுவாமி சன்னதி எதிரே உள்ள கோயில் வாசல் சாலை மூடப்பட்டது.

இதையடுத்து நெல்லை சந்திப்பு பகுதியிலிருந்து டவுனுக்கு வரும் வாகனங்கள் சொக்கப்பனை முக்கில் திரும்பி பாரதியார் தெரு வழியாக சென்று சந்திப்பிள்ளையார் கோயில் நிறுத்தம் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல வேண்டும். தென்காசி செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் ஆர்ச் பகுதியில் திரும்பி தெற்கு மவுண்ட் சாலையில் செல்ல வேண்டும். இதுபோல் கீழரத வீதியில் அம்மன், சுவாமி சன்னதி சாலையில் வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இந்த நடவடிக்கை தேரோட்ட திருவிழா முடிவடையும் வரை அமலில் இருக்கும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

நெல்லை அரசு கல்லூரியில் எம்.பில்., விண்ணப்பம் விநியோகம்





நெல்லை ராணி அண்ணா அரசு மகளிர் கலைக்கல்லூரியில் M.Phil., பாடப்பிரிவில் 2017-18ம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது. எம்பில்., (தமிழ், வணிகவியல், அறிவியல், MHRD) பாடங்களுக்கு விண்ணப்பங்களை பெறலாம். விண்ணப்ப படிவ கட்டணம் ரூ.100 மற்றும் பதிவுகட்டணம் ரூ.2 ஆகும். சேர்க்கை விண்ணப்ப படிவத்தை ரூ.102 கொடுத்து கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். என கல் லூரி முதல்வர் பார்வதி தெரிவித்துள்ளார்.

நெல்லை ஷிபா மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கு திறப்பு




நெல்லையில் இயங்கி வரும் ஷிபா மருத்துவமனையில் நவீன அறுவை சிகிச்சை அரங்கம் திறப்பு விழா நடந்தது. மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் முகம்மது ஷாபி அறுவை சிகிச்சை அரங்குகளை திறந்து வைத்தார். தொடர்ந்து மருத்துவ இயக்குனர் டாக்டர் முகமது அரபாத் அறுவை சிகிச்சை அரங்கின் சிறப்பம்சங்களை விளக்கினார். குவாலிட்டி கவுன்சில் ஆப் இந்தியா மூலம் வழங்கப்படும் என் ஏ பி எச் என்ட்ரி லெவல் அக்ரிடியேசன் நெல்லை மாவட்டத்தில் முதல் முறையாக ஷிபா மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.


உயர் அறுவை சிகிச்சைக்கான உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் அறுவை சிகிச்சை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை மற்றும் அனைத்து ஸ்பெஷாலிட்டி அறுவை சிகிச்சைகளும் செய்யும் வகையில் உலக தரம் வாய்ந்த ஹேப்பா பில்டர் லேமினர் ஏர்பிளோ வசதிகளுடன் இந்த இரட்டை அறுவை சிகிச்சை அரங்கங்கள் அமைந்துள்ளன என்று மருத்துவ இயக்குனர் முகமது அரபாத் கூறினார். ஏற்பாடுகளை ஷிபா மருத்துவ நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

வெண்புள்ளி நோயால் 1.84 சதவீதம் பேர் பாதிப்பு - டீன் சித்தி அத்தியமுனவரா






நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக வெண்புள்ளி விழிப்புணர்வு வார விழா நடந்தது. துறை தலைவர் டாக்டர் நிர்மலாதேவி வரவேற்றார். மருத்துவக்கல்லூரி டீன் சித்தி அத்திய முனவரா, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வெளியிட்டு பேசியதாவது:

பொதுமக்களில் 1.84 சதவீதம் பேரை வெண்புள்ளி நோய் பாதித்துள்ளது. ஆண்களை விட பெண்களுக்கு இரு மடங்கு பாதிப்பு ஏற்படுகிறது. இது சிறு வயது முதல் முதியவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம், காரணம் தெரியாத ஒவ்வாமை காரணமாக நமது உடலில் ஏற்படும் ஒருவித மெலானின் என்ற கருப்பு நிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது.

இது தொற்று வியாதி அல்ல. தாய்க்கு இருந்தால் குழந்தைக்கு பால் கொடுக்க தயங்க வேண்டாம். அவர்கள் எப்போதும் போல் குழந்தை பெற்றுக் கொள்ளலாம், ஆரம்ப நிலையிலேயே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் குணப்படுத்தவும் பரவுவதை தடுக்கவும் முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


இதில் தோல்நோய் பிரிவு முன்னாள் துறை தலைவர் டாக்டர் மகாகிருஷ்ணன், மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் கண்ணன், டாக்டர் ஆறுமுகம், மக்கள் தொடர்பு அலுவலர் டாக்டர் ரேவதி பாலன், நுண்ணுயிரியல் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணலீலா ஆகியோர் பேசினர். 

நெல்லையில் நாளை மின்தடை



நெல்லை நகர்புறமின் விநியோக செயற்பொறியாளர் ஐசன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது... கொக்கிரகுளம் உபமின் நிலையத்தில் நாளை (1ம் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கொக்கிரகுளம், நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், மணிமூர்த்தீஸ்வரம், உடையார்பட்டி முருகன்குறிச்சி, திருவனந்தபுரம் ரோடு, வடக்கு மற்றும் தெற்கு பைபாஸ் சாலை, வண்ணார்பேட்டை, குருந்துடையார்புரம், அம்பை சாலையின் மேற்கு பகுதிகளான மெயின் பஜார், நேதாஜி ரோடு, குறிச்சி, நத்தம், குட்டிமூப்பன் தெரு, காஜா நாயகம் தெரு, அத்தியடி தெரு ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.


மின்னோட்டத்திற்கு இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் போன்றவைகளை அகற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Wednesday 28 June 2017

ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழி இடம்பெறும் – ரயில்வே வாரியம் அறிவிப்பு.




ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெறுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.


தற்போது ரயில்வேயால் வழங்கப்படும் ரயில் டிக்கெட்டுகளில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளே இடம் பெற்றுள்ளன. இது படிக்காதவர்களுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. மேலும் ரயில் டிக்கெட்களில் தமிழ் இடம்பெற வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன.


இந்நிலையில் ரயில் டிக்கெட்டுகளில் தமிழ் மொழியும் இடம்பெறுவதற்கு ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை வரும்  ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக  பயணிகள் உதவிக்குழு மற்றும் ரயில்வே வாரியம் இடையே நடந்த கூட்டத்தில்  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜூலை 1 முதல் ஆதார் எண் - பான் எண் இணைப்பு கட்டாயம் – மத்திய அரசு உத்தரவு.





வருமான வரி செலுத்துவோர், தங்களது பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்பு உத்தரவிட்டது. ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசின் உத்தரவுக்கு தடைவிதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த நிலையில் மத்திய அரசு நேற்று வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளது. இதில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உத்தரவிட்டுள்ளது. வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. 

2017-18-ம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் வழியாக வரி தாக்கல் செய்வதில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி திருத்தம் கொண்டு வந்தார். வருமான வரித் தாக்கல் செய்வதற்கு ஆதார் கட்டாயம் மற்றும் பல பான் கார்டுகள் வைத்து வரி ஏய்ப்பு செய்வதை தடுப்பதற்காக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது என இரு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


வருமான வரி சட்டம் 139ஏஏ (2)-ன் படி, வருகிற ஜூலை 1-ம் தேதி முதல் பான் எண் யாருக்கெல்லாம் வழங்கப்படுகிறதோ அவர்கள் கட்டாயமாக ஆதார் எண்ணை தெரிவிக்க வேண்டும் என்று மத்திய வருவாய்த்துறை தெரிவித்துள்ளது. வரி செலுத்துபவர்களில் இதுவரை 2.07 கோடி ஏற்கெனவே பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். மொத்தம் இந்தியாவில் 25 கோடி பேர் பான் எண்ணை வைத்துள்ளனர். ஆதார் எண் மொத்தம் 111 கோடி பேருக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணையதளத்தின் மூலமாக இணைப்பதற்கான வசதிகளையும் மத்திய அரசு தொடங்கியுள்ளது.

புதிய மால்வேர் இணைய வைரஸ் பரவி வருகிறது.




இப்போது புதிதாக ஒரு மால்வேர், இணைய வைரஸ் உலக நாடுகளிடையே பரவிக் கொண்டிருக்கிறதாம். இந்தப் புதிய மால்வேர், ரஷ்யாவின் உக்ரைனில் விதைக்கப் பட்டதாகக் கருதப்படுகிறது. 


நேற்று மதியத்திலிருந்து உலகின் பல நாடுகளில் கூடுதல் வலிமை கொண்ட இணைய வைரஸ் ஒன்று தன் வேலையைக் காட்டத் தொடங்கி உள்ளது. உலகெங்கிலும் இருந்து பலர் மால்வேர் தாக்குதலுக்குட்பட்டு செயலிழந்து விட்ட தங்கள் மடிக்கணினிகள் மற்றும் மேஜைக் கணினிகளின் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

ரஷ்யாவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மால்வேர் ஐரோப்பாவின் அனைத்து கணிகளையும் ஊடுருவியதோடு மொத்த உலகையுமே ஒரு ஆட்டு ஆட்டி வைக்கப் போவதாக என் உள்ளுணர்வு சொல்வதால் எனக்கு மிகுந்த கவலையாக இருக்கிறது என இன்ஃபோசேஃப் எனும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் செயல் தலைவர் விக்டர் ஸோரா குறிப்பிட்டுள்ளார். 


ஐரோப்பாவில் 60% கணினிகளைத் தாக்கி முடக்கியுள்ள இந்த வைரஸ் உக்ரைனிலும் கணிசமாக கைவரிசையைக் காட்டியிருக்கிறது. மிகப்பெரிய மால்கள், மருத்துவமனைகள், வங்கிகள், கேஸ் ஏஜன்ஸிகள், என முக்கியமான வர்த்தக மற்றும் சேவை நிறுவனங்களின் கணினிகளை எல்லா முடக்கியுள்ள இந்த மால்வேரை எப்படி ஒழித்துக் கட்டுவது என கணிப்பொறியியல் வல்லுனர்கள் தற்போது கடுமையாக விவாதித்து வருகிறார்கள்.

நெல்லையப்பர் கோயில் ஆனிப்பெருந்திருவிழா கொடியேற்றம்.











பிரசித்திப் பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை டவுனிலுள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ஆனிப் பெருந்திருவிழா தனித்துவமிக்கது. இந்தாண்டுக்கான ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று(29ம் தேதி) துவங்கி 10 நாட்கள் நடக்கிறது.


இதையொட்டி இன்று காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. காலை 7  மணிக்கு மேல் 8.30 மணிக்குள் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு வழிபாடு மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதலாம் ஆண்டு துவக்க விழா.







சேரன்மாதேவி ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஸ்காட் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் திரு. மணிமாறன் அவர்கள் மாணவர்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்தி பேசினார். 

ஸ்காட் கல்வி நிறுவனங்களின் பொதுமேலாளர் திரு. தம்பிதுரை அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் ஸ்காட் கல்வியியல் கல்லூரி முதல்வர், ஐ.டி.ஐ முதல்வர், துறைத்தலைவர்கள்,  பேராசிரியர்கள், பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.