மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday 11 October 2017

பறை இது கூத்தல்ல, கலை




தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களில் கூத்துக் கலையும் ஒன்று.

கிராமத்தின் மண்வாசனையும், கிராம மக்களது வாழ்வாதாரங்களையும் அவர்கள் மதம் மீது கொண்ட பற்றுதலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைவது கூத்துக்கலை. கூத்துக்கள் பல்வேறு செய்திகளை சமூகத்திற்கு கொண்டு செல்கின்றன.

அந்த காலத்தில் வாழ்ந்த நம் முன்னோர்கள் பொழுது போக்குக்காகவும். உழைத்த களைப்பை போக்கி இளைப்பாறவும் ஒரு முற்றத்தில் ஒன்று கூடி ஆடிப்பாடி மகிழ்ந்தார்கள். அதுவே நாளடைவில் பல்வேறு பரிமாணங்களைப் பெற்று கலைகளாகத் தோற்றம் பெற்றது. அன்று அவர்கள் பொது முற்றத்தில் ஆடிப்பாடியதே இன்று கூத்து என்ற பெயரைப் பெற்று வளர்ந்து நிற்கிறது. இயல், இசை, நாடகம் மூன்றும் சேர்ந்த தமிழை முத்தமிழ் என்கிறோம். நாடகம் என நாம் கூறுவதை பழந்தமிழ் கூத்து என்கிறது.

கூத்துக்களில் அகக்கூத்து, புறக்கூத்து என இருவகைகள் உண்டு. புறக்கூத்து என்பதே பொதுமக்கள் முன்னிலையில் ஆடப்படும் கூத்தாகும். அகக்கூத்து ஒரு இல்லத்தில் ஆடப்படுவது. கோவலனை மாதவி எட்டு வகையான வரிக்கூத்துக்களால் மயக்கினாள் என்று சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.

தப்பு' என்னும் இசைக்கருவியினை இசைத்து ஆடப்படும் ஆட்டம் என்பதால் தப்பாட்டம் என்று அழைக்கப்படுகிறது. இக்கலையினைப் பறையாட்டம்' என்றும் அழைப்பர். இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் கோவில் நிகழ்ச்சிகளிலும், வாழ்க்கை வட்டச் சடங்குகளிலும், அரசியல் பிரசாரங்களிலும் தப்பாட்டம் நிகழ்த்தப்படுகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் வழக்கிலிருந்தாலும் தஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இதனை நிகழ்த்தி வருகின்றனர். தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், கல்லூரி மாணவர்களும் இக்கலையினைப் பயின்று நிகழ்த்தி வருகின்றனர், ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்ட இக்கலையினைத் தற்போது பெண்களும் பயின்று ஆடுகின்றனர்.

இதற்கு ஏன் தப்பாட்டம் என்று பெயர் வைத்தார்கள், தப்பான ஆட்டம் என்று பொருள் கிடையாது, இது தாளம் தப்பாமல் ஆட வைக்கும் ஒரு உன்னத கலையாகும். தப்பாத ஆட்டம் என்பதே மருவி தப்பாட்டம் என்று பெயர் வந்தது. ஆனால் பறை என்பது எப்பேர்ப்பட்ட மனிதரையும் ஆட வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

பறை ஒரு தமிழிசைக் கருவியாகும். இது தோலால் ஆன மேளமாகும். பறைஎன்ற சொல் பேச்சைக் குறிப்பதாகும். பேசுஎனப்பொருள்படும் அறைஎன்ற சொல்லினின்று பறைதோன்றியது. பேசுவதை இசைக்கவல்ல தாளக் கருவி பறை' எனப்பட்டது. பன்னெடுங்கால வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ள பறை, ஓர் இசைக் கருவி மட்டுமல்ல தொல்குடித் தமிழ்ச் சமூகத்தின் சொத்து. தோலிசைக் கருவிகளின் தாய். தமிழினத்தின் தொன்மையான அடையாளம். உழைக்கும் மக்களின் இசைக் களஞ்சியம். தமிழர் வாழ்வியலின் முகம். கற்காலத்தின் முதல் தகவல் தொடர்பு சாதனம். பறையடித்து தகவல் சொல்லுதல் பழங்காலத்தில் ஒரு முக்கிய தகவல் பரப்பு முறையாகவும், பறையரின் தொழிலாகவும் அமைந்தது. பண்டைய காலத்தில் வாழ்ந்த தொல்குடித் தமிழர்களின் நிலவியல் பாகுபாட்டின் அடிப்படையிலும் பறை பயன்படுத்தப்பட்ட வரலாறு உண்டு. குறிஞ்சிப்பறை, முல்லைப்பறை, மருதப்பறை, நெய்தற்பறை, பாலைப்பறை என ஐய்ந்திணைகளிலும் பறை முழக்கிய செய்திகள் காணக் கிடைக்கின்றன. பறை' என்ற சொல்லே இசைக் கருவியையும், செய்தி அறிவிக்கும் முறையையும் குறித்தது என தொல்காப்பியம் கூறுகிறது.

வரலாறு

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் பறைதல் என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் பறையர்' என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் தூயத் தமிழ் சொற்கள் தொழில் நிலையை குறிக்கும் பெயராக மாற்றம் பெற்றுள்ளன. இதனால் காலப்போக்கில் பறை' எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

வாழ்வியல் கூறுகளுடன் பறை..

ஒரு மன்னன் எதிர்நாட்டுக்கு சென்று போர் புரியும் முன் அங்குள்ள போர் புரியவியலாத மக்களை வெளியேர வேண்ட, பெருகிவரும் புனலை அடைக்க, உழவர் மக்களை அழைக்க, போர்க்கெழுமாறு வீரர்களை அணிதிரட்ட, வெற்றி தோல்வியை அறிவிக்க, வயல்களில் உழவு வேலை செய்வோருக்கு ஊக்கமளிக்க, விதைக்க, அறுவடை செய்ய, காடுகளில் விலங்குகளை விரட்ட, மன்னரின் செய்திகளை மக்களுக்குத் தெரிவிக்க, இயற்கை வழிபாட்டில், கூத்துகளில், விழாக்களில், இறப்பில். எனப் பல்வேறு வாழ்வியல் கூறுகளுடன் பறை' இணைந்து இயங்கியுள்ளதற்கான ஆதாரங்கள் உள்ளன.

பறை என்பது ஓடும் இசையை ஒழுங்கு பெற நிறுத்தி ஓர் அளவோடு சீரோடு, ஒத்த அழகோடு நடக்க, இசைக்கு நடை கற்பிக்கும் கருவி.

பறை ஆட்டம்

பறை ஆட்டம் என்பது தமிழர்களின் பாரம்பரியமான நடனம் ஆகும். பறையாட்டம் உணர்ச்சி மிக்கது. மற்றும் எழுச்சி மிகுந்தது. அதிர்ந்தெழும் பறையின் ஓசைக்கேற்ப ஆடக்கூடியது என்பதால் பறையாட்டம் கிளர்ந்தெழும் உடல் அசைவுகளைக் கொண்டது. ஆவேசம், மகிழ்ச்சி, உற்சாகம் என உணர்ச்சிகளை எழுப்பி, கேட்போரை ஒரே நேர்க்கோட்டில் இணைக்கும் சக்தி வாய்ந்தது இது.

பழமையை மறந்து இன்று நவீன மேற்கத்திய இசைக்கு அடிமையானவர்களை மீண்டும் நமது கலாச்சார நடனத்திற்கு அழைத்து செல்வது என்பதே இந்த பறை ஆட்டம் என்பதாகும். அந்த நினைவு பொக்கிஷத்தை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர முயற்சிக்கின்றார்கள் இன்றைய கிராமத்து இளைஞர்கள்.

திருநெல்வேலியை அடுத்துள்ள கீழப்பட்டம் ஊராட்சியில் உள்ள இளைஞர்கள் இந்த பறை யின் மேன்மையினை உலகிற்கு எடுத்து சொல்ல ஒரு குறும்படம் தயாரித்து வருகின்றார்கள், அதன் தலைப்பு "பறை இது கூத்தல்ல, கலை", இதில் கிராமத்து இளைஞர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். திருநெல்வேலியின் முன்னணி உள்ளூர் தொலைக்காட்சியின் நாயகன் மயூரி. அரிமா. ஆறுமுக நயினார், தானாகவே தேடித் சென்று தனது பங்களிப்பை கொடுத்திருக்கின்றார்,

எத்தனையோ நவீன இளைஞர்கள் காதல் படங்களை எடுத்து வரும் இவ்வேளையில் இந்த இளைஞர்களின் கலாச்சார மேன்மையை உலகிற்கு உணர்த்த தனது பங்களிப்பை கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து தானும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். அவர்களது இந்த கலை முயற்சி வெற்றி பெற மயிலோசை குழுமம் தனது வாழ்த்துக்களை பதிவு செய்கின்றது.

Monks Cine Creators தயாரிப்பில் வெளி வரும் பறை இது கூத்தல்ல, கலை என்ற குறும்படத்தில் 16 பேர் கொண்ட இளைஞர் பட்டாளம் நடித்துள்ளது. இந்த குழுவில் இயக்குனர் மனோ விக்கி, மீரான், ராம்பாபு, கிளிண்டன், ஜார்ஜ், செல்வி. மிர்ராரஹ்மத், செல்வகுமாரன், ஆதித்யா மோகன், சதிஷ் குமார், சுப்பையா, டில்டன், மதன், காஜா, பிரவின் மற்றும் அஜய் என ஒரு இளைஞர் பட்டாளமே நடித்துள்ளது. இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியை அடுத்துள்ள கீழப்பாட்டம் ஊராட்சியில் வைத்து நடைபெற்றது. படப்பிடிப்பிற்கு ஊர் பொதுமக்கள், தலைவர் என அனைவருமே ஒத்துழைப்பு கொடுத்து உதவி செய்தனர். படப்பிடிப்பின் எல்லா பகுதிகளும் நிறைவடைந்து அக்டோபர் இரண்டாம் வாரத்தில் வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் மனோ விக்கி தெரிவித்தார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மயூரி. அரிமா ஆறுமுகநயினார் நடித்து கொடுத்திருந்தார். வளரும் கலைஞர்களை உருவாக்கும் முயற்சியில், ஊக்கப்படுத்தும் வகையில் மயூரி தொலைக்காட்சி செயல்படும் என்று அவர் தெரிவித்திருந்தார்.   இப்படம் மற்றும் புதிய படங்கள் எடுக்க விரும்புவோர்: மனோ-98846 56210 மீரான் - 81229 85680 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். குறும்படம் வெற்றி பெற மயிலோசை வாழ்த்துகிறது.

செய்தி
திரு. ஆ. சிவராமலிங்கம்.
மயிலோசை இணை ஆசிரியர்.





No comments:

Post a Comment