தூத்துக்குடி மாவட்டம் பழையகாயலில் இருந்து அகரம், முக்காணி வரையிலும் ஏராளமான தோட்டங்களில் வாழை பயிரிடப்பட்டு உள்ளது. செவ்வாய்கிழமையன்று மதியம் 1.30 மணி அளவில் அகரம் ஊரின் வடபுறத்தில் உள்ள வாழை தோட்டங்களில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. காய்ந்தவாழை இலைகளில் தீப்பிடித்து நாலாபுறமும் மள, மளவென்று தீ பரவியது. மதியம் 2 மணி அளவில்தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் அகரம் விலக்கு வரையிலும் தீ பரவியது. அங்குள்ள தென்னைமரங்கள், பனை மரங்கள், சீமை கருவேல மரங்களிலும் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற வாகனங்கள் புதுக்கோட்டை, சாயர்புரம், ஏரல் வழியாக திருப்பி விடப்பட்டன.இந்த தீ விபத்து குறித்து அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனம், பழையகாயல் சிர்கோனியம் ஆகியஇடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டன. அங்கிருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உடனடியாக செயல்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர்.
தீ விபத்தால் தூத்துக்குடி-திருச்செந்தூர் ரோட்டில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீரை எடுத்து வந்து தீயணைப்பு வாகனங்களில் நிரப்பிதீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து ஏரல் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment