மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Monday, 24 July 2017

தாமிரபரணி ஆற்றில் உயிர்நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு அஞ்சலி




நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தேயிலை தோட்டதொழிலாளர்களுக்கு ஞாயிற்றுகிழமையன்று  பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் டாக்டர் கிருஷ்ணசாமி, திருமாவளவன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

நெல்லையில் கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை மாதம் 23-ந்தேதி ஊதிய உயர்வு கேட்டு மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தியதால் கூட்டம் சிதறி ஓடியது. இதில் தாமிரபரணி ஆற்றுக்குள் விழுந்து 17 பேர் உயிரிழந்தனர். இதையொட்டி ஆண்டு தோறும் ஜூலை மாதம் 23-ந்தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்றது.விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில், அந்த கட்சியினர் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து ஊர்வலமாக தாமிரபரணி ஆற்றுக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் கனியமுதன், மாநகர மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர், கட்சி நிர்வாகிகள் நடராஜன், வேலாயுதம், அமுதா மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது திருமாவளன் நிருபர்களிடம் கூறியதாவது:- மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் உரிமைக்காக போராடும் போது தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிர் நீத்தனர். அவர்களுத்து அஞ்சலி செலுத்துகிறோம். ஆதிதிராவிட மக்களை பாதுகாக்க தமிழக அரசு உரிய சட்ட பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் அந்த கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்கள் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் இறங்கி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் டாக்டர் கிருஷ்ணசாமி அங்கு நிருபர்களிடம் கூறியதாவது:- தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு தூண் நிறுவ வேண்டும். மேலும் ஒரு மண்டபமும் கட்ட வேண்டும்.  மாஞ்சோலை தேயிலை தோட்டம் ஜமீன் ஒழிப்புக்கு பிறகு தமிழக அரசுக்கு சொந்தமானது ஆகும். இது தொடர்பான குத்தகை 2 ஆண்டுகளில் முடிய உள்ளது. ஆனால் குத்தகையை முடிக்க விடாமல் கோர்ட்டுகளில் வழக்கு போட்டு தடுத்து வருகின்றனர். 
எனவே தமிழக அரசு இதை முடிவுக்கு கொண்டு வந்து, அங்குள்ள 8 ஆயிரத்து 830 ஏக்கர் நிலத்தை தொழிலாளர்களுக்கு தலா 2லு ஏக்கர் வீதம் பிரித்து குத்தகைக்கு வழங்க வேண்டும். இதன் மூலம் சிறு தேயிலை தோட்டங்களாக செயல்படும், என்றார். 

இந்த நிகழ்ச்சியில் புதிய தமிழகம் கட்சி நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் செல்லப்பா, மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், கிழக்கு மாவட்ட செயலாளர் இன்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான் பாண்டியன் தலைமையில் வண்ணார்பேட்டை மேம்பாலத்தில் இருந்து அந்த கட்சியினர் ஊர்வலமாக வந்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றுக்குள் இறங்கி மலர் வளையம் வைத்து, பூக்களை தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில்...  “தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும். நெடுவாசலில் 100 நாட்களுக்கு மேலாக பொது மக்கள் போராடி வருகின்றனர். இதில் ஈடுபட்ட வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்தது கண்டிக்கத்தக்கது என்றார். 

இந்த நிகழ்ச்சியில் மாநில துணை பொதுச் செயலாளர் சந்திரன், கொள்கை பரப்பு செயலாளர் நெல்லையப்பன், விவசாய அணி செயலாளர் துரை தவமணி, மாநில பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன், மாநில செய்தி தொடர்பாளர் சுதாகர், தென்மண்டல செயலாளர் அழகர்சாமி, நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் ரவி தேவேந்திரன், தலைவர் கண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், வடக்கு மாவட்ட செயலாளர் வினு பாண்டியன், முன்னாள் மாநகர மாவட்ட செயலாளர் கண்மணி மாவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

பா.ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் தயாசங்கர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் நெல்லை மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், கிழக்கு மாவட்ட தலைவர் எஸ்.கே.எம்.சிவகுமார் ஆகியோர் தலைமையில் காங்கிரசார் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நெல்லை மாவட்ட தலைவர் சீயோன் தங்கராஜ் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. மத்திய மாநில எஸ்.சி,. எஸ்.டி. அரசு ஊழியர் கூட்டமைப்பு மாநில தலைவர் கருப்பையா தலைமையில் அஞ்சலி செலுத்தினர். இந்திர சேனா கட்சி மாநில பொதுச் செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். நாம் தமிழர் கட்சி சார்பில் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தலைமையில் அஞ்சலி செலுத்தப்ட்டது. 

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் காசி விசுவநாதன் தலைமையிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், பழனி ஆகியோர் தலைமையிலும் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சி சார்பில் மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு மக்கள் விடுதலை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ராஜமாணிக்கம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

ராஜ்ய மள்ளர் கட்சி சார்பில் நிறுவன தலைவர் எம்.சி.கார்த்திக் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு சார்பில் மாநில தலைவர் பார்வதி சண்முகம் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் வண்ணை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்து மகா சபா சார்பில் மாரியப்பன் தலைமையிலும், இந்து மக்கள் கட்சி சார்பில் உடையார் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கவுதம் தலைமையில் அஞ்சலி செலுத்தினர். ஆதித்தமிழர் பேரவை சார்பில் கலைக்கண்ணன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆதித்தமிழர் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது அவர் நினைவு தூண் அமைக்க வலியுறுத்தி வாயில் கருப்பு துணி கட்டி வந்தனர். தமிழ்ப்புலிகள் அமைப்பின் தலைவர் நாகை திருவள்ளுவன் தலைமையில், நெல்லை மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் முன்னிலையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. 

வீரத்தமிழர் கட்சி சார்பில் தேன் மோகன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதே போல் பல்வேறு அமைப்பினர் தாமிரபரணி ஆற்றில் உயிர் நீத்த தொழிலாளர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதுதவிர நெல்லை கருப்பந்துறையில் உடல் அடக்கம் செய்யப்பட்டு உள்ள 3 பேர் நினைவிடத்தில், கண்மணி மாவீரன் தலைமையில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

No comments:

Post a Comment