நெல்லையப்பர் கோயில் தேரோட்டம்
வரும் 7ம் தேதி நடப்பதை முன்னிட்டு டவுன் 4 ரதவீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
நெல்லையில் பிரசித்தி பெற்ற
சுவாமி நெல்லையப்பர் கோயில் ஆனி திருவிழா தேரோட்ட நிகழ்ச்சி வரும் 7ம் தேதி நடக்கிறது. இதையடுத்து டவுன் ரத வீதிகளில் தேர்கள் தடையின்றி
செல்வதற்கும், பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் இருப்பதற்கு, ரத வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆட்சியர் சந்தீப் நந்தூரி
உத்தரவிட்டார்.
மாநகராட்சி ஆணையர் சிவ சுப்பிரமணியன், தலைமை பொறியாளர் நாராயணன் நாயர் மேற்பார்வையில் உதவி ஆணையர் கீதா, உதவி செயற் பொறியாளர் சாமுவேல் செல்வராஜ், திட்ட இளநிலை பொறியாளர் முருகேசன், உதவி பொறியாளர் அருள், இளநிலை பொறியாளர் சங்கர சுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர்கள் முருகன், சிவகுமார் மற்றும் 50 க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகள்
அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
ஜேசிபி மற்றும் மாநகராட்சி
லாரிகள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. சந்தி பிள்ளையார் கோயில் அருகே
தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் சாலையின் இரு புறங்களிலும், கடைகளின் முன்பக்கம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள், விளம்பர பலகைகள் மற்றும் நடை பாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட திண்டுகள்
ஆகியவை இடித்து அப்புறப்படுத்தப்பட்டன.
சாலையோர தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகளும் அகற்றப்பட்டன. இவை லாரிகளில் ஏற்றப்பட்டு குப்பை
கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதையடுத்து இன்ஸ்பெக்டர்
சோம சுந்தரம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

No comments:
Post a Comment