மயிலோசை பிரேக் நியூஸ்! (இன்று) 6.2.2018 செவ்வாய்க்கிழமை நெல்லை டவுண் வாகையடிமுனையில் வணிகர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.*** புத்தகக் கண்காட்சியில், இதழாளர் அய்கோ அவர்களின் "மலரினும் மெல்லிது "நூல் வெளியீட்டு விழா.*** சந்திநகர் கிறிஸ்து ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா.***! பாளை, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் மரக்கன்று நடும் விழா.***! FX பொறியியல் கல்லூரியில சிறப்பு பயிற்சி கருத்தரங்கம்.***! பாளை பெருமாள்புரம் தூயதோமா ஆலய கோபுர பிரதிஷ்டை மற்றும் 48ம் ஆண்டு அசன பண்டிகை நடைபெற்றது. ***! சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி பேராசிரியைக்கு மலேசியா கல்வி .அமைச்சர் திரு.டத்தோ.சரவணன் பாராட்டு.***! நெல்லையில் வரும் 2018ல் தாமிரபரணி நதிக்கு மஹா புஷ்கர விழா நடைபெறுகிறது.***!நெல்லையில் கந்துவட்டி குறித்த விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் சட்ட உதவி மைய நீதிபதி வழங்கினார்.***!

Wednesday, 11 October 2017

தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் திரு. சுதாங்கன்



தமிழ்நாட்டின் மூத்த பத்திரிக்கையாளர் திரு. சுதாங்கன் அவர்களோடு நம்ம ஊரு நாயகன் நிகழ்ச்சிக்காக மயிலோசையின் பேட்டி


உங்களது பூர்வீகம், குடும்ப பின்னணி பற்றி...

எனது பெற்றோர் என்று சொல்வதை விட, எனது அம்மாவின் அப்பா, அவர்களது அப்பா, அவர்களது தம்பி என்று மிகப்பெரிய பாரம்பரியத்தை கொண்டதுதான் எங்களது குடும்பம். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்திருக்கும் நவதிருப்பதி ஆலயங்களில் ஒன்றான தென்திருப்பேரை தான் எனது சொந்த ஊராகும். இங்கே தோன்றியவர்தான் பிஸ்ரீ ஆச்சாரி  அவர்கள், பிஸ்ரீ அவர்களின் தந்தை வழிதான் தென்திருப்பேரையை பூர்வீகமாக கொண்டவர், தாயார் விட்டிலாபுரம் பகுதியை சேர்ந்தவர், பிஸ்ரீ அவர்களின் தந்தை பிச்சு அய்யங்காரிடம் தேடி, தேடிச் சென்று தமிழ் கற்றார். பிஸ்ரீ ஒரு வரகவி என்று சொன்னால் அவரது சகோதரர் அனந்தக்ரிஷ்ணன், ஒரு சித்திர கவியாவார்.  அனந்த கிருஷ்ண அய்யங்கார் வேறு யாருமல்ல தமிழுக்கு பெருமை சேர்த்த உவே சாமியின் மிக நெருங்கிய நண்பராவார். அந்த காலத்தில் எங்கள் வீட்டு சூழல் எப்படி இருந்தது எனில் காலை எழுந்ததும் பாடம் படி என்று சொன்ன நாட்களை விட நாளிதழ் படி என்று சொன்ன நாட்கள்தான் அதிகம். பிஸ்ரீ அவர்கள் அந்த காலத்திலேயே ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக பணியில் இறங்கினார். அப்போது அந்த தருணத்தில் கம்ப சித்தரும், சித்த ராமாயணமும் தமிழில் எழுதி கம்பரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை இவரையே சேரும். இதுவே எங்களது குடும்பத்தின் முழு பின்னணி ஆகும்.

உங்களது குடும்ப பின்னணி?

எனது தனிப்பட்ட குடும்ப வாழ்க்கை என்பது நான் முழுக்க முழுக்க சென்னைவாசிதான். நான் பிறந்ததே சென்னையில்தான். நான் கோடைகால விடுமுறைக்கு மட்டுமே எனது தாத்தாவின் ஊருக்கு வரும் பாக்கியம் கிட்டியது. அதனால் எனக்கும் இந்த பூர்வீக நினைவலைகள் எப்போதுமே ஒட்டிக்கொண்டிருக்கின்றது. காரணம், தென்திருப்பேரை ஊருக்கு ஒரு சிறப்பு யாதெனில், பலருக்கு தெரிய வாய்ப்பில்லை, எதார்த்தமாக சொல்வதென்றால், இப்போதெல்லாம் ஒரு கோவிலின் முன்னே ஒரு துக்க நிகழ்ச்சி நடைபெற்றால் உடனே கோவில் நடையினை சாற்றி விடுவார்கள், ஆனால் தென்திருப்பேரையில் அப்படியல்ல, தன் கோவிலை சுற்றியுள்ள நூற்றியெட்டு குடும்பங்களின் ஏதாவது துக்க நிகழ்ச்சி நடைபெறும்போது கோவிலின் நடை திறக்கப்படும், காரணம் பகவானின் பார்வையில் பட்டு அவரது பங்களிப்பும் அதில் இடம் பெற்றிருக்க வேண்டும் என்பதே அதன் ஐதீகம், அப்பேர்பட்ட சிறப்பு இந்த ஊருக்கு உண்டு.       நான் படித்தது பிகாம். அதன் பிறகு நான் ஜர்னலிசம் எதுவும் படிக்கவில்லை, என் கையெழுத்து பிரதியை பார்த்து மாலன் அவர்கள் 81ஆம் ஆண்டு சாவி என்ற பத்திரிகைக்கு என்னை பரிந்துரைத்தார். மாலனும் நமது நெல்லை மாநகரத்தை சேர்ந்தவர்தான், அன்று என்னை தமிழ் பத்திரிக்கைக்கு அடையாளம் படுத்தியவர்தான் மாலன். என்னுடைய உண்மையான பெயர் ரெங்கராஜன். குமுதம் பத்திரிகை எழுத போனால், அப்போதெல்லாம் யாரும் குமுதம் பத்திரிகைக்கு வேலைக்கு போனால் வேலைக்கு அழைக்கவே மாட்டார்கள். யாராவது கட்டுரைகள் எழுதி கொடுத்தால் அப்போது மட்டும் அந்த கட்டுரைக்குரிய சன்மானம் மட்டுமே வழங்கப்படும். அப்போது அந்த ஆசிரியர் எஸ்ஏபி, இணையாசிரியர் ரெங்கராஜன், ஆகியோர் இருந்தனர். அப்போது இணையாசிரியர் என்னை அழைத்து இங்கே வா, என்ன என் பெயரே உனக்கும் இருக்கிறது? நாளை நீ பெரிய ஆளாக ஆனதும் எல்லோரும் நீ எழுதிய கட்டுரைகளையும் பார்த்து உன்னை பாராட்டுவதற்கு பதில் என்னை பாராட்டி விட்டு செல்வார்கள். அதனால் உன் பெயரை மாற்றிக் கொள் என்று சொன்ன பிறகுதான் ரெங்கராஜன் "சுதாங்கன்" என்று மாற்றப்பட்டது.   அதன் பிறகு வெளிவந்த முதல் ஜூனியர் விகடனில் முதல் நிருபரானேன். அதன் பிறகு அந்த கால ஓட்டத்தில் கல்கத்தாவில் வெளிவரும் நாளிதழில் சிறப்பு கட்டுரைக்கு விருதை பெற்ற தென்னிந்தியாவிலேயே அந்த விருதை பெற்றவர் நான்தான் என்று சொல்லலாம். அதன்பிறகு ஜூனியர் விகடனில் பொறுப்பாசிரியராக பொறுப்பேற்றுக்கொண்டேன். தினமணி, தமிழன் எக்ஸ்பிரஸ் ஆகிய இதழ்களில் எழுத்து உருவத்தில் மக்களை சந்தித்து வந்தேன். அதன் பிறகு 96இல் தொலைக்காட்சிகளில் நேரிடையாக மக்களை சந்தித்து பேசத் தொடங்கினேன். தேர்தல் முடிவுகள், என்று பல பல தொலைக்காட்சிகளில் எனது உரைகள் நடைபெற்றது. இதுதான் ரெங்கராஜன் என்ற சுதாங்கனின் வாழ்க்கை பின்னணி.

ஒரு பத்திரிக்கையாளராக, தொலைக்காட்சி நெறியாளராக இருக்க, மாற காரணம் என்ன?

ஒருவேளை நாளை என் மரணத்திற்கு பிறகு எனது குடும்பத்தார் கண்ணீர் அஞ்சலி என்று பத்திரிகைகளை தேடி ஓடக்கூடாது, காசு கொடுத்து விளம்பரம் செய்யக்கூடாது, பத்திரிகைகளே என்னைத் தேடி எனது இரங்கல் செய்தியை வெளியிட வேண்டும் என்ற உத்வேகம் மட்டும் எனக்குள் இருந்து வந்தது, ஒன்று சந்தன கடத்தல் வீரப்பனாக இருக்க வேண்டும் இல்லையெனில் அப்துல்கலாமாக இருக்க வேண்டும், ஆனால் விதிவசம் பாருங்கள் வீரப்பன் போல இருக்க உடலில் தெம்பும் கிடையாது, அப்துல் கலாம் அய்யா போல இருக்க அறிவாளியும் கிடையாது, அப்படியெனில் பிரபலமாவது எப்படி என்ற ஒரே சிந்தனைதான் பத்திரிகை துறையை தேர்ந்தெடுத்தேன். அந்த சாதனையை இன்று நான் செய்துவிட்டேன் என்று நான் நினைக்கின்றேன்.

அப்போது ஊடகத்துறையை பற்றிய விமர்சனங்களை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்?

            இன்று ஊடகத்துறையை பற்றி சொல்லிக்கொடுக்க பல்வேறு கல்விச்சாலைகள், பயிற்சி நிறுவனங்கள் இருக்கிறது, ஆனால் அக்காலத்தில் எதுவுமே கிடையாது, பத்திரிகை துறை என்றாலே கேலியும் கிண்டலும்தான் நிறைந்திருக்கும், பத்திரிகை சரி, வயிற்றுக்கு வேற என்ன வேலை செய்யப்போகின்றாய் என்பது போலவே கேட்பார்கள். அக்காலத்தில் பத்திரிக்கைத்துறையினர் என்பவர்கள் உருவாக்கப்படவில்லை, அவர்கள் பத்திரிக்கையாளனாகவே பிறக்கின்றார்கள், அப்படி ஒரு தீப்பொறி எனக்குள் இருந்தது, அந்த தீப்பொறிதான் என்னை இன்று உலகிற்கு அடையாளப்படுத்தியுள்ளது என்று நான் நம்புகின்றேன்.

உங்கள் வாழ்க்கையில் நீண்ட கால சாதனை, கனவு, லட்சியம் என்ற ஒன்றை நிர்ணயித்து வைத்திருக்கிறீர்களா?

ஒரு விஷயம் நன்கு புரிந்து கொள்ளுங்கள், என்றைக்கு உங்கள் பணியில் திருப்தி என்று சொல்கின்றீர்களோ, அன்றே அந்த பணியின் முடிவு ஆரம்பமாகிவிட்டது, என்று அர்த்தம், அதன் பிறகு நமது போராட்டமும், வைராக்கியமும் குறைய தொடங்கி விடும், காரணம் நாம் சாதித்து விட்டோம் என்ற எண்ணம் நமக்குள் வந்து விடும். அதனால் நான் எதையுமே நிர்ணயித்து வைக்கவில்லை. இதுதான் டார்கெட் என்று எனக்கு எதுவுமே கிடையாது. முடிந்தவரை முயற்சி செய்து கொண்டே இருப்பேன்,    இந்த விஷயத்தை அடைய வேண்டும், இத்தனை பிரதிகள் விற்று லாபம் சம்பாதிக்க வேண்டும், செலவுகள் செய்ய வேண்டும், விற்க வேண்டும் என்று நினைப்பதற்கு இது தொழில் அல்ல, இது உன்னதமான படைப்பு! இந்த வருஷம் ஒரு கோடி, அடுத்த வருஷம் 4 கோடி என்று நிர்ணயிப்பதற்கு இது பொதுவான அல்லது தனியார் நிறுவனம் அல்ல, இது மக்களின் கலைப்படைப்பு மற்றும் ரசனைகள். பத்திரிகையாளருக்கு இந்த விஷயம் பொருந்தவே பொருந்தாது. பத்திரிக்கை என்பது நமது சுவாசம் மாதிரி, செயற்கை சுவாசம் மூலமாக சில காலம் தாக்கு பிடிக்கலாம்.

உங்கள் அனுபவத்தில் சிறந்த நாளிதழ், தொலைகாட்சி என்று எதனை குறிப்பிடுகின்றீர்கள்?

பொதுவான அனுபவத்தை மட்டுமே நான் சொல்ல விரும்புகின்றேன். நாளிதழ், வார இதழ் எல்லாமே கூட்டு முயற்சியின் வெளிப்பாடுதான், ஒரு சிறுகதை சொல்ல விரும்புகிறேன், சாலையோரங்களில் கூத்தாடி கூட்டம் ஒன்று இருக்கும். சாலையில் கம்பு கட்டி ஆடுவார்கள், பெரும்பாலும் சிறு குழந்தைகள்தான் ஆடிக்கொண்டிருப்பார்கள். அவர்களை வைத்து வித்தை காட்டுபவன் அந்த குழந்தைக்கு உத்திரவுகள் பிறப்பித்து கொண்டே இருப்பான், இவர்களை தாண்டி ஒருவன் அந்த ஆட்டத்தை காட்டி தட்டு ஏந்தி யாசகம் பெற்றுக்கொண்டிருப்பான். இதில் ஆடுபவன் அல்லது யாசகம் பெறுபவன் இருவரில் ஒருவரது கவனம் திசை திரும்பினாலும் மக்கள் விலகி போய் விடுவார்கள். ஆடுபவன் யாசகம் பெறுபவனை பார்க்க கூடாது, யாசகம் பெறுபவன் ஆடுபவனை பார்க்க கூடாது, இந்த கூத்துக்கு கதாநாயகனே அந்த ஆடும் குழந்தைதான். அதனுடைய கவனம் திசை திரும்பும்போது  அனைத்துமே சிதறி போகும்,  கஷ்டப்பட்டு ஆடி, யாசகம் பெறவில்லை எனில் உபயோகமில்லை. ஆனால் ஆடுபவன் எங்கு சென்றாலும் அவனால் ஆட முடியும், அவனுக்கு தெரிந்த சட்டத்தினை ஆள் இல்லாமல் தனியாக கூட ஆட முடியும், ஆனால் அவனால் அதிகமாக சம்பாதிக்க முடியாது. காரணம் ஆடி முடித்த பிறகு அவன் வசூல் செய்ய வரும்போது பலர் கலைந்து சென்று விடுவார்கள்.   ஆடுபவன் வேறு யாருமல்ல, எழுத்தாளன்! யாசகம் பெறுபவன் விற்பனை பிரதிநிதியாவான், இதற்கு மேல் நீங்கள் கேட்ட கேள்விக்கு விளக்கம் தேவை இல்லை என்று நான் நினைக்கின்றேன்.

என்னென்ன தடைகளை மீறி இந்த துறையில் நீங்கள் முன்னேறி வந்திருக்கிறீர்கள் என்பது பற்றி...

இளவயதில் இருந்த வேகத்தில் நான் பார்க்கும் போது எந்த தடைகளும் என் கண்களுக்கு தெரியவில்லை நான் உணரவும் இல்லை, தற்போது திரும்பி பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் நான் பல தடைகளை மீறி, தாண்டித்தான் வந்திருக்கின்றேன் என்பது புரிந்தது. நான் குமுதம் இதழில் கற்றுக்கொண்டது என்னவெனில், ஒரு வாரத்தில் இருப்பது போல, அடுத்த வார இதழில் இருக்காது, ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசங்களை காட்டிக்கொண்டே இருப்பார்கள், அது எனக்கு மிகப்பெரிய உந்து சக்தியாக இருந்தது, அதன் பிறகு இந்தியன் எக்ஸ்பிரஸில் பணியாற்றும் போது அருண் ஷோரி என்பவர்தான் எனக்கு முன்னுதாரணமாக இருந்தார். அவர் அதில் புலனாய்வுத்துறை பத்திரிக்கையாளராக பணியாற்றினார்.  அதனால் அதன் பின்னர் ஜுனியர் விகடனில் பணியாற்றும் போது மிக உதவியாக இருந்தது. 1983-86 வரை உள்ள ஜுனியர் விகடனை புரட்டி பார்த்தால், இப்போது இருக்கும் வாரமிருமுறை இதழாக கூட கிடையாது, அப்போது வாரம் ஒருமுறைதான், 32 பக்க ஜுனியர் விகடனில் 28 பக்கங்கள் எழுதிய இதழ்களும் உண்டு. வருடத்திற்கு 52 இதழ்களில் 45 இதழ்களில் அட்டைப்பட கொற்றைகளை எழுதி வழங்கிய பெருமையும் எனக்கு உண்டு. அரசியல், சமூகம், சினிமா, பொது நிகழ்ச்சிகள் என்று எல்லாவற்றையும் கையாளக்கூடிய வாய்ப்புகள் எனக்கு கிடைத்ததால் ஒவ்வொரு வாரமும் அந்த இதழை முடிக்கும் போது எனக்குள் ஒரு புது அனுபவம் வந்து சேர்ந்தது. அது கொஞ்சம், கொஞ்சமாய் படிவம் இட்டுக்கொண்டிருந்தது. இப்படித்தான் நான் வளர்ந்தேன் தவிர, என்னை கேட்டால் வாழ்க்கையில் ஒருவனுக்கு லட்சியம் என்று ஒன்று இருந்தால் எல்லா தடைகளும் பொடி பொடியாகி விடும்.

இதுவரை நீங்கள் எடுத்த பேட்டிகளில் உங்களையே ஸ்தம்பிக்க செய்த பிரபலங்கள் பற்றி....

எதிரணியிடம் விஷயங்கள் இல்லையென்றால் யார் வேண்டுமானாலும் பேட்டியெடுக்கலாம்.  நான் ஒருவரை பேட்டி காணப்போகின்றேன் என்றால் முழுமையாக அவரை பற்றி முழுமையாக அவரது ஆணிவேரை பற்றி தெரியாமல் பேட்டி எடுக்க மாட்டேன் அல்லது அவரை பற்றி முழு விபரம் தெரிந்த பின்னரே பேட்டிக்கு  தயாராவேன்,ஒரு அரசியல்வாதி என்றால் நேற்று, போனவாரம், இன்று  அவர் என்ன கருத்து சொன்னார் என்பதையெல்லாம் தயார் செய்து விட்டு பேட்டியெடுக்கையில் எந்த ஒரு பிரபலமாக இருந்தாலும் எளிதாக பேட்டி எடுத்து விடலாம்.

1999 இல் விஜய் டீவிக்காக முதல் நாள் மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 9 மணி வரை தொடர்ந்து 16 மணி நேரம்  தனியாக நான் ஒருவனே பேட்டியெடுத்தேன், முதல் நாள் என்னை சுற்றி இருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 9, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர், ஒரு வளரும் கம்யூனிஸ்ட் தலைவர், ஒரு முஸ்லீம் லீக், பிஜேபி இல.கணேசன், காங்கிரசின் திருநாவுக்கரசு, இப்படி புலி, சிங்கங்கள் முன்னால் அமர்ந்து கொண்டு அவர்களுக்குள் சண்டை சச்சரவுகள் வராமல், அவர்கள் பேச்சு அனைவருக்கும் கேட்கும்படியாக சமாளித்தது வேண்டுமானால் பெருமைக்குரியதாக இருக்குமே தவிர, எனக்கு நான் ஸ்தம்பித்த பிரபலம் என்று யாரையும் என்னால் குறிப்பிட்டு சொல்ல இயலாது.

பேட்டியின் போது எதிராளியை மடக்க வழிகள் ஏதாவது எடுத்து கொள்வீர்களா?

நீங்கள் நிறைய படித்தால்தான், சமயோசித புத்தி என்பது வரும், முதலில் நீங்கள் மற்றவர்களை விட ஒருபடி மேலாக படித்து விட்டீர்கள் என்று காட்டினாலே, கிரிக்கெட்டில் டெண்டுல்கர் ஒன்று சொல்வார், ஒரு ஓவரில் ரெண்டு 4, ரெண்டு 6 அடித்து விட்டால் எதிரணியினர் பயந்து விடுவார்கள், அதுபோல, நீங்கள் உங்கள் எதிராளியை புத்திசாலித்தனத்தால் கொஞ்சம் மிரள வைத்தாலே அப்படியே பம்மி விடுவார்கள். அதற்குத்தான் படிப்பு என்ற ஒன்று தேவைப்படுகிறது. ஒவ்வொரு இளைஞருக்கும் சொல்கின்றேன், more you know more you grow , knowledge is power, பணம் அரசியலோ, அதிகாரமோ அல்ல, உங்களுடைய அறிவு மட்டும்தான்.

இன்றைய ஊடகத்துறையின் பிளஸ் மற்றும் மைனஸ் பற்றி...

இதை சொல்லாமல் என்னால் தவிர்க்க முடியவில்லை, ஏனெனில் நான் செயகாந்தன் நாவல்கள் படித்தவன், உண்மைகளை சொல்லியே பழக்கப்பட்டவன், ஊடகம் எப்படி செல்லக்கூடாதோ, யாரிடம் சென்று சிக்கியிருக்க கூடாதோ, அவர்களிடம் போய் சிக்கி தமிழ்நாட்டின் கல்வியை, கலாச்சாரத்தை, கலையை, ரசனையை, ஊடகத்துறையின் பண்புகளை, அடிப்படை நாகரிகங்களை உள்ளிட்ட எல்லாவற்றையும் காலில் போட்டு மிதித்து விட்டு அதன் மேல் காலன் என்னும் ராட்சசன் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கின்றான் என்றுதான் சொல்ல வேண்டும். இப்போதுள்ள இளைஞர்களுக்கு ஒரு பெரிய பிரச்சினை என்னவென்றால் ஊடகத்துறைக்கு வந்து முதல் மாத சம்பளம் பெற்று அதன் பின் தனது முகத்தை தொலைக்காட்சியில் காட்டிவிட்டாலே, தங்களுக்கு எல்லாமே தெரிந்து விட்டது என்ற மமதை வந்து சேர்ந்து விடுகிறது. எப்போது அவர்களுக்கு அந்த மமதை தலைக்குள் ஏற ஆரம்பிக்கிறதோ அப்போதே அவர்களது வளர்ச்சிக்கு தடை வந்துவிட்டது என்றே அர்த்தம். இப்போது எனது அகவை 59, நான் இன்னும் கற்க வேண்டியது நிறைய இருக்கிறது, இன்னும் படிக்க வில்லையே, படிக்க வில்லையே என்று இன்றும் இப்போதும் தவித்து கொண்டிருக்கின்றேன். இந்த தவிப்பு, இளம் ஊடகவியலாளர்களுக்கு இருந்தால் கண்டிப்பாக அவர்கள் வெற்றி பெறுவார்கள்.

இன்றைய தொழில்நுட்பம் எப்படி இருக்கிறீர்கள்?

அன்று தொழில்நுட்பம் அப்போதுதான் அறிமுகம் ஆகி கொண்டிருந்தது, அதை வைத்து கொண்டு அந்த தொலைக்காட்சிக்குள் இருக்கிற சாரம் வலுவாக இருந்தது, இந்த தொழில்நுட்பம் வளர, வளர எதையுமே வேகமாக செய்து விட முடியும் என்கிற பொழுது, அந்த தொழில்நுட்பத்தை மனிதன் கையாள வேண்டும் என்பதை தவிர, தொழில்நுட்பம் மனிதனை கையாளத் தொடங்கி விட்டது. அது எவ்வளவு வேகமாக வேலை செய்யுமோ, அதை போலவே இவர்களுக்கும் வேகம் இருக்கிறதே தவிர, விவேகம் என்பது இருக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. அதுதான் அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்யாசம். ஒரு நெறியாளனுக்கு பொறுப்பு என்பது யார் தந்தது, தொலைக்காட்சி மூலமாக வந்தது, முன்பு சொல்வார்கள், "Freedom of the PRESS is not from the Government to the PRESS" It is from the publisher to the Editor, ஒரு ஊடகத்தை நடத்துகின்ற முதலாளி என்ன சிந்தனையில் இருக்கிறாரோ, அதை பொறுத்தே அவரது சமூக சிந்தனையும், அவரது சமூக பொறுப்பையும் பொறுத்தே அவரது ஊடகத்தின் தரமும், தன்மையும் அமையும். அதுதான் இன்று நடந்து வருகின்றது.

யாருக்கு நன்றி சொல்ல விரும்புகின்றீர்கள்?

முதலில் எனது தந்தை, ஏனென்றால் நான் பள்ளிப்படிப்பை படிக்கின்றேனோ என்னவோ மற்ற புத்தகங்களை படிக்க வேண்டும் என்று ஊக்குவித்தவர், எனது ஒன்பதாவது வயதிலேயே செயகாந்தனின் சிறுகதைகளையும், குறுநாவல்களையும் எனக்கு படிக்க அறிமுகப்படுத்தியவர் எனது தந்தைதான். முக்கியமான ஒரு காலகட்டத்தில் வேறு ஊருக்கு மாற்றி தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்று சொன்னபோது பிடிவாதமாக எனது தாயார் பிள்ளைகள் இரண்டு பேருமே ஆங்கில வழிக்கல்வியில்தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்ததால் இன்று என்னால், சரளமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பேட்டி எடுக்க முடியும். ஆங்கில புத்தங்கங்களை தமிழில் மொழி பெயர்க்கின்றேன், இதற்கெல்லாம் எனது தாயாருக்கு நான் நன்றி சொல்வேன். நான் என்றைக்கும் எல்லா மேடைகளிலும் சொல்லிக்கொண்டிருப்பது போல, என்னை கண்டெடுத்த ஞானத்தந்தை மாலன் என்னை பெரிய அளவில் வெளிச்சம் போட்டு காட்டியவர்,  ராகே ரெங்கராஜன், சுந்தரேசன், புனிதன், எனக்கு பெயர் மாற்றம் செய்து வைத்தவர் பாக்கியம் ராமசாமி என்ற அப்போது சீதா பாட்டி, அப்புசாமி கதைகள் எழுதிய சுந்தரேசன், எனக்கு பெயர் மாற்றம் பற்றி சொல்லுவார், அவருக்கு எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எனக்கு வாய்ப்பளித்த விகடன் நிறுவனம், எக்ஸ்பிரஸ் நிறுவனம் இவர்களுக்கெல்லாம் நான் என்றுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

இன்றைய இளைய தலைமுறைக்கு உங்களது அறிவுரை என்ன?

யாருக்கும் அறிவுரை சொல்லுகின்ற, தகுதி எனக்கு இருப்பதாக நினைக்கவில்லை, ஆனால் ஒன்றே ஒன்று சொல்கின்றேன், ஒரு சில ஆண்கள் டாஸ்மாக், கிரிக்கெட்டில் இருந்தும், ஒரு சில பெண்கள், வீட்டுக்குள்ளேயே வந்து கோரத்தாண்டவம் ஆடும் டாஸ்மாக் கடைகளாக இருக்கும் தொலைகாட்சி தொடர்களை, பெண்களை மிக கேவலமாக கொச்சை படுத்தும் கலாச்சார சீர்கேடுகளை உருவாக்கும் தொடர்களை டாஸ்மாக் கடைகளை அடித்து நொறுக்கியது போல வெறுத்து ஒதுக்க வேண்டும் என்று மட்டுமே கேட்டுக்கொள்கின்றேன்.

நம்ம ஊரு நாயகன் தலைப்பில் வரும் எங்களது இந்த முயற்சி பற்றிய தங்களது கருத்து?


ஒவ்வொரு மாவட்டத்திலும் செய்ய வேண்டிய சிறப்பு மிக்க முயற்சி என்றே நான் நினைக்கின்றேன். அதனால் உங்களது முயற்சியை நான் மனதார பாராட்டுகின்றேன். தன்பிள்ளை பெருமை தாய்க்கு தெரியாது ஊருக்குத்தான் தெரியும் என்று சொல்வார்கள், ஆனால் அப்படி இல்லை எங்கள் மண்ணின் நாயகர்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகின்றோம் என்று எடுத்திருக்கும் உங்களது முயற்சியை நிச்சயமாக நான் பெரிதும் பாராட்டுகின்றேன். மயிலோசை வாசகர்களுக்கு எனது நன்றி கலந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றேன். 

செய்தி 
திரு. ஆ. சிவராமலிங்கம்.
மயிலோசை இணை ஆசிரியர்.


No comments:

Post a Comment